Sunday, June 3, 2012

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

நான் சென்னைக்கு வந்த புதிதில் பல்லவன் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கூடவே சில துணை நடிகர்கள் பயணிப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு முறை குள்ளமணி கண்டக்டர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். தன்னை யாராவது அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார் , நான் அவரைப் பார்த்து சிரித்தேன். அடையாளம் தெரிந்துவிட்டதா என்ற அர்த்தத்தோடு பதிலுக்கு அவரும் சிரித்தார். குள்ளமணி , புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கார். ஒரு ஓட்டலில் வேலை கேட்டதற்கு *டேபிள் உயரம் கூட இல்லை எப்படி டேபிளைத் துடைப்பாய்* என திட்டி அனுப்பிவிட்டார்கள். மனதொடிந்த மனிதருக்கு மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் வேலை கொடுத்திருக்கிறார். குள்ள மணி 34 படங்களில் ஜெய்சங்கருடன் நடித்திருக்கிறார். குள்ளமணியாக இருந்தாலும் சரி குண்டு கல்யாணமாக என்றாலும் சரி எந்த ஒரு துணை நடிகருக்கும் கஷ்டம் என்றால் ஓடோடிப் போய் உதவும் மனப்போக்கு ஜெய்சங்கருக்கு இறுதிவரை இருந்திருக்கிறது. தான் உதவி செய்தவர்களைத் தான் இறந்த பிறகு தொந்தரவு செய்யக்கூடாது என தன் மகன்களிடம் அன்புக்கட்டளையிட்டிருந்தாராம் ஜெய். ஜெய்சங்கரின் இயற்பெயர் சங்கர். இயக்குநர் தளியத் ஜோசப் இவர் பெயருக்கு முன்னால் ஜெய் சேர்த்து ஜெய்சங்கராக்கி இரவும் பகலும்(1965) படத்தில் கதாநாயகனாக நடிகக்வைத்தார். அசோகன் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.அசோகனும் ஜெய்சங்கரும் ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவர்கள் .அசோகனின் இறுதிச் சடங்கை அருகில் இருந்து செய்து கொடுத்திருக்கிறார் ஜெய் 0 தொடர்ந்து 150 படத்திற்கு மேல் கதாநாயகர்களாக நடித்தவர்கள் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான். ஜெய்சங்கரின் 150 வது படம் வண்டிக்காரன் மகள். ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற பட்டமும் உண்டு .வாரம் ஒரு படம் என்ற கணக்கில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வெளிவரும் அளவிற்கு நடித்திருக்கிறார். இவர் புண்ணியத்தில் திரைத்துறையில் இருந்த அடிப்பொடி நடிகர்களுக்கெல்லாம் தொடர்ந்து வருமானம் கிடைத்திருக்கிறது. வியட்நாம் வீடு சுந்தரம் தான் இயக்க இருக்கும் விஜயா படத்தில் நடிப்பதற்கு ஜெய்சங்கரைக் கேட்டிருக்கிறார்.*உன் படத்துல சிவாஜி தானப்பா நடிப்பாரு* எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் ஜெய். பிறகு தனது மேக்கப்மேனிடம் சொல்லி வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார்.சரி நான் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டார் ஜெய் , அந்நேரம் ஜெய் வேறொரு படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தின் பாடல்காட்சி ஒன்றை சூட் செய்து கொண்டிருந்த பொழுது சுந்தரத்தின் மனைவிக்கு குழந்தை பிறந்து விட்டது என சேதி வந்திருக்கிறது , உடனே ஜெய் *நான் பாட்ட சூட் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு *என சுந்தரத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஜெய்சங்கரின் கிருதா கொஞ்சம் நீட்டிக் கொண்டு விகாரமாய் இருந்திருக்கிறது , இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு தான் அவர் கிருதாவைக் குறைத்து திருத்தி அமைத்தார்கள். 0 ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடித்தார் ஜெய் . அப்பொழுது ரஜினி காந்த் *நூற்றைம்பது படங்களில் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் வில்லன் என்பதால், படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்துவிடாதீர்கள்* என்று கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார். ஜெய்சங்கர் நடித்த பாலாபிஷேகம் படத்தை போரூருக்கு அருகில் உள்ள கெருகம்பாக்கத்தில் தான் படம்பிடித்திருக்கிறார்கள்.ஜெய் , அந்த ஊர் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு வானொலி ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். மேலும் தான் படித்த சென்னை புதுக் கல்லூரிக்கு உணவு விடுதி ஒன்றைக் கட்டிக் கொருத்திருக்கிறார் ஜெய். 0 ஜெய்சங்கர் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள். …. இவர் ஒரு அழகிய பூஞ்சிட்டு வயசு ஈரொன்பது பதினெட்டு உடலது பனிவிழும் மலர்மொட்டு பேசும் ஒவ்வொரு சொல்லும் தேன்சொட்டு – காதல் படுத்தும் பாடு http://www.youtube.com/watch?v=u-DcDKA8PDY அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் குழந்தை பருவம் பதினாறு – நீ ஒரு மகாராணி http://www.youtube.com/watch?v=Zdg78yqoaBA அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் நங்கை முகம் நவரச நிலவு – வீட்டுக்கு வீடு http://www.youtube.com/watch?v=JqD6SRwLHuE மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வெச்சேனே என் கண்ண ஒம்மேலதான் – பாலாபிசேகம் http://www.youtube.com/watch?v=YC7CWywsuwc புன்னகையோ பூமழையோ பொங்கிவரும் தாமரையோ மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ http://www.youtube.com/watch?v=gfitdf680wE நித்தம் நித்தம் ஒருபுத்தம் புதிய சுகம் நான் தேடினேன் இளமை கொஞ்சும் விழி தலைமை தாங்கும் உனை என்றும் நாடினேன் – நூற்றுக்கு நூறு http://www.youtube.com/watch?v=FgDnA_jPldw சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் அன்பு வெட்கத்தில் விளங்கும் விளக்கம் – குலமா குணமா http://www.youtube.com/watch?v=xsaZW8MVlys கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் – மேயர் மீனாக்க்ஷி